தேர்தல் நெருங்குவதால் புது புது அடிமைகளை பாஜகவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக பகுத்தறிவு பாசறை அணி மாநில செயலாளர் திருவிடம் என்பவரது படத்திறப்பு நிகழ்ச்சி, திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:
மறைந்த திருவிடம் மிகச் சிறந்த கொள்கை பற்றாளராக திகழ்ந்தவர். தனிமனித இயக்கமாக விளங்கியவர். அவரைப் போல லட்சக்கணக்கான தொண்டர்களை பெற்றது திமுக. இளைஞர் அணியினரும், கட்சியினரும் ஒவ்வொருவருமே தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அடுத்தது தமிழ்நாடு என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திருவண்ணாமலையில் நான் பதில் அளித்தபோது ‘வி ஆர் ரெடி டு ஃபைட்’ என தெரிவித்தேன்.
தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொண்டர்களும் அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் ஏற்கனவே இருக்கின்ற அடிமைகள் போதாது என்று புது புது அடிமைகளை தேடிப்பிடித்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்களுடனும் கூட்டணி வைத்து வருவார்கள். அவர்களையெல்லாம் தமிழக மக்களின் ஆதரவுடன் ஓட ஓட விரட்ட வேண்டும்.
வரும் 2026 தேர்தல் என்பது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கின்ற தேர்தல். சமூக நீதிக்கும், அநீதிக்கும் நடக்கின்ற தேர்தல். மாநில உரிமைக்கும், டெல்லிக்கும் நடக்கின்ற தேர்தல் என்பதை உணர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். நிச்சயம் திமுக மற்றும் அதன் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். ஏழாவது முறையாக திமுக ஆட்சியில் அமரவும், இரண்டாவது முறை முல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக அமரவும் இருக்கின்ற 100 நாட்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருக்கும் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற திமுகவினர் உழைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆரம்பத்தில் இருந்து எஸ்.ஐ.ஆருக்கு ஒரு மாதம் போதாது என்று முதல்வர் கூறியிருந்தார். அதற்கான வழிமுறைகள் கூறி உள்ளார்கள். நாளை, நாளை மறுநாள் ஆன்லைன் பார்த்தால் தான் யார் யார் விடுபட்டு இருக்கிறார்கள்? என்பது தெரியும் அதற்கு பிறகும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, கலைஞர் கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது குழந்தைகளுடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
