சேலத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் அதற்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் கடிதம் மூலமாக விளக்கம் அளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய நிலையில், சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், சேலத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
