பாஜக உடனான கூட்டணிக்கு விஜய் வர வேண்டுமென்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனான சந்திப்புக்கு பிறகு சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், விஜய் தனியாக நிற்பதை விட பாஜக உடனான கூட்டணியில் இணைந்து அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி எளிதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சருடனான ஆலோசனையில் விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசியதாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இப்போது எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்ட தமிழிசை, முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் இனி அடிக்கடி தமிழ்நாடு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் கூட்டணியால் திமுக வெடவெடத்துப் போய் உள்ளதாகவும் தமிழிசை குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களெல்லாம் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

