தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நவம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், சரிபார்க்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இந்தநிலையில், SIR பணிகள் நிறைவடைந்து, டிசம்பர் 19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இருந்தால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும் சூழலில், அதில் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர்.
டிசம்பர் 19ம் தேதி முதல் தற்போது வரை பெயர் சேர்ப்புக்கு படிவம் 6 மற்றும் 6 ஏ படிவங்களை நிரப்பி 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் வரும் 27 மற்றும் 28ம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
