மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார்,

அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார்.

பின்னர், தனது பிரசார வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர். இதனால், பிரசார வாகனம் மெதுவாக பிரசார பகுதிக்கு சென்றது.

முன்னதாக, இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனவும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version