செப்டம்பம் 5-ந் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 17-ந் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள் – மரங்களிடையே கூட பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிற்குள் கடந்த சில மாதங்களாக மீண்டும் உள்கட்சி பூசல் வெடித்து கிளம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதல் பிரச்னை வெடித்தது கடந்த பிப்ரவரியில். அப்போது கோவை அருகே அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாயிகள் சங்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. பங்கேற்காததற்கு நிகழ்ச்சி தொடர்பான விளம்பரங்களில் தங்களை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் படங்கள் இல்லை என்பதை காரணமாக கூறியிருந்தார்.
அதேபோன்று அதிமுக – பாஜக கூட்டணி இறுதியாவதற்கு முன்னதாக தனியாக டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அதிமுகவுக்கு கே.ஏ.செங்கோட்டையனை தலைமைப்பொறுப்புக்கு கொண்டு வர பாஜக விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுகவை சேர்ந்த ஒருவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னது கூட செங்கோட்டையனை மனதில் வைத்துக் கொண்டுதான் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜுலை மாதம் முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் பொறுப்பாளராக இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி – கே.ஏ.செங்கோட்டையன் இருவருக்கும் இடையிலான உறவு அவ்வளவு உவப்பாக இல்லை என்பது வெளிப்படையாக தெரியவந்தது.
இந்நிலையில் வருகிற 5-ந் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இபிஎஸ் உடனான மோதலால் அதிமுகவில் இருந்து வெளியேறப் போகிறாரா? அல்லது ஓபிஎஸ் – சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவுக்குள் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறாரா? அதிமுகவில் இருந்து வெளியேறி திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஏதேனும் ஒன்றில் இணையப் போகிறாரா? என்ற யூகங்கள் அரசியல் வானில் வட்டமடிக்கின்றன. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுபட்டால் மட்டும்தான் வலுமிக்க திமுகவை எதிர்கொள்ள முடியும் என்ற சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டிருக்கிற பிளவுகள் மேலும் சரிவைத் தான் தரும் என கவலையில் உள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.