புதுச்சேரி மாநிலத்தில் சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றும் எனவே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுத்தமான குடிநீர், மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்காகத் தான் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு, அவர்களுக்கு வீட்டிற்கே குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தை பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் ஒருசில சட்டமன்ற தொகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அரியங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய்திட்டு (தென்கை திட்டு) மற்றும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் மண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது.

தேங்காய்திட்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு மஞ்சள் நிறத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் ஒருசில சமயங்களில் குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வந்து விடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த அசுத்தமான நீரை பயன்படுத்துபவர்கள் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இந்நிலையில் பலமுறை புகார் அளித்தும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறி, சோனாம்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட அலுவலகத்தையும் ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அசுத்தமான அந்த நீரை கேன்களில் பிடித்துக் கொண்டு போய் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள செய்திகளையும் பார்க்க முடிகிறது.

இயற்கை வளம் நிரம்பிய புதுச்சேரியில் ஏறத்தாழ 17 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. எனில் இவர்களுக்கு உரிய சுத்தமான குடிநீரை வழங்க முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

அடிப்படையான சிக்கல் என்னவென்றால், சோனாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீர் உந்து நிலையத்தில் இருந்து தேங்காய்திட்டு, நயினார் மண்டபம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு நீர் அனுப்பப்படுகிறது. அங்கு இருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இந்த நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழமையான இந்த குழாய்கள் துருப்பிடித்தும், மாசடைந்தும் காணப்படுவதே நீர் அசுத்தத்திற்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு மழைக்காலங்களில் இந்த குழாய்கள், கழிவுநீர் வாய்க்கால்களால் மூடப்படுகிறது. விளைவு, குடிநீரோடு கழிவுநீரும் கலந்து வந்து விடுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அதாவது 30 ஆண்டுகள் பழமைமிக்க, காலாவதியான, துருப்பிடித்த குழாய்களை அகற்றி விட்டு புதிய குழாய்களை பதிப்பிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அவற்றை சீரான இடைவெளியில் தூர்வாரி நீரோட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் குடிநீரும், கழிவுநீரும் கலக்காமல் செய்யலாம்.

நயினார் மண்டபம் போன்ற இடங்களில் புதிய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பழைய குழாய்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிகிறது. இதுவும் அங்கு சிக்கல் நீடிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. புதிய குழாய்கள் பதியப்பட்ட பிறகு பழையவற்றை அகற்றுவது தானே முறை?.

அரசின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். அதாவது 20 லிட்டர் கொள்ளவு கொண்ட கலனில் நிரப்பப்பட்ட நீரை சுத்திகரிக்க தற்போது ரூ.7 வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் அசுத்தமான நீரை சுத்திகரித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு உள்ளபோதும், வீடுகள் வரை சுத்தமான நீரை விநியோகிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் தேங்காய்திட்டு, நயினார் மண்டபம் போன்ற பகுதிகளில் நிலவி வரும் அசுத்தமான, மஞ்சள் நிறம் கலந்த நீர் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும். சுத்தமான, குடிக்க தகுந்த, பயன்படுத்த தகுந்த நீர் விநியோகிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற வாய்ப்பும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வாய்ப்பும் மக்களுக்கு சேவை செய்வதற்கே. அவர்கள் பொங்கி எழுந்து கேள்வி கேட்கும்வரை ஒரு சிக்கலை நீடிக்க விடுவது நிர்வாகத்திற்கு அழகல்ல. நிலத்தடி நீரை நன்னீராக கொண்டு வருவதற்கும், கடல்நீரை பயன்படுத்தத் தகுந்த நீராக மாற்றுவதற்கும் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் தற்போது வந்துவிட்டன.

அத்தகைய நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களை வரவழைத்தும் அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றி அரசு யோசிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version