நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாதாரண ரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல், கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்களில், 215 கிலோ மீட்டருக்கு மேல், கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணம் 330 ரூபாயில் இருந்து 340 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு 262 ரூபாயாகவும், நெல்லைக்கு 418 ரூபாயாகவும், நாகர்கோவிலுக்கு 445 ரூபாயாகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கான ரயில் கட்டணம் 15 ரூபாய் உயர்ந்து 455 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலத்திற்கு 273 ரூபாயாகவும், ஈரோடு செல்வதற்கு 283 ரூபாயாகவும், கோவை செல்வதற்கு 340 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 845 ரூபாயில் இருந்து 890 ரூபாயாகவும், சென்னையில் இருந்து மும்பைக்கான ரயில் கட்டணம் 605 ரூபாயில் இருந்து 631 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கட்டண உயர்வு மூலம் 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
அதேநேரம் 215 கிலோ மீட்டர் வரையிலான ரயில் பயணத்திற்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை என்றும் புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
