கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரே ரஸல், கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். 37 வயதான இவரை கேகேஆர் நிர்வாகம் இந்த ஆண்டு அணியிலிருந்து விடுவித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்தே ஓய்வுபெறுவதாக ரஸல் அறிவித்துள்ளார். சிஎஸ்கே போன்ற மற்ற அணிகள் அவரை தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டிருந்த நிலையில், மினி ஏலத்திற்கு முன்பு ரஸல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

தன்னுடைய இந்த முடிவு குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். இந்த முடிவை அவ்வளவு எளிதில் எடுத்துவிடவில்லை. 12 சீசன்களின் நினைவுகள் மற்றும் கேகேஆர் குடும்பத்தின் அபரிமிதமான அன்புடன் வெளியேறுகிறேன். ஐபிஎல்லில் இல்லாவிட்டாலும் உலகின் மற்ற நாடுகளில் நடைபெறுகிற லீக்குகளில் விளையாடுவேன்.

நான் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் என்னுடைய வீடாக கேகேஆரை விட்டு வெளியே போகவில்லை. 2026ஆம் ஆண்டு ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் ‘பவர் கோச்’ என்ற புதிய கோணத்தில் என்னை பார்க்கப் போகிறீர்கள். அதே எனர்ஜியுடன் புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் டைம்லைனில் வேறு ஐபிஎஸ் ஜெர்ஸியில் தன்னை பார்க்கும்போது மிகவும் சங்கடமாக உணர்ந்ததாகவும், தனக்கென ஒரு மரபை உண்டாக்க நினைப்பதாகவும் கூறியுள்ள அவர், இந்த ஐபிஎல்லில் இருந்து விலகும் முடிவை எடுப்பதற்கு முன்பு பல உறக்கமில்லா இரவுகளை கடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 2025 வரை ஐபிஎல் தொடர்களில் ஆண்ட்ரே ரஸல் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர் முதலில் அப்போது டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் களம்கண்ட டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை மொத்தம் 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஸல், கேகேஆர் அணிக்காக மட்டும் 133 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, மொத்தம் 2593 ரன்கள் எடுத்திருக்கிறார். அதில் பேட்டிங் சராசரி 28.81. ரஸலின் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 2651 ரன்கள் எடுத்திருக்கிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version