நாட்டில் ரயில் பயணத்திற்கான தேவை வேகமாக வளர்ந்து வருவதை எதிர்கொள்ளும் வகையில், இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளை கணிசமாக விரிவுபடுத்த ரயில்வே இலக்கு வைத்துள்ளது.
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை சீராக கையாள எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய ரயில்வே உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் திட்டத்தில், கோச்சிங் முனையங்களை விரிவுபடுத்துதல், புதிய முனையங்களைக் கட்டுதல், மற்றும் தண்டவாளம் மற்றும் சிக்னல் அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல் போன்ற முக்கிய திட்டங்கள் அடங்கும். முன்மொழியப்பட்ட திட்டங்களில், தற்போதுள்ள முனையங்களில் கூடுதல் நடைமேடைகள், நிறுத்துமிடப் பாதைகள், பராமரிப்புப் பாதைகள் மற்றும் ரயில் பெட்டிகளை மாற்றி அமைப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும்.
முனையங்களின் எண்ணிக்கையும், அவற்றைச் சுற்றியுள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்படும் என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக, புனேவுடன் சேர்த்து ஹடப்சர், கட்கி மற்றும் ஆலந்தி ரயில் நிலையங்களும் கொள்ளளவு மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
புறநகர் மற்றும் புறநகர் அல்லாத போக்குவரத்து இரண்டிற்கும் சமமான கவனம் செலுத்தப்பட உள்ளது. புறநகர் மற்றும் புறநகர் அல்லாத போக்குவரத்து இரண்டின் தேவைகளும் வெவ்வேறாக இருப்பதால், இந்தத் திட்டம் இரண்டையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நாட்டின் 48 முக்கிய நகரங்களுக்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட, முன்மொழியப்பட்ட மற்றும் புதிய திட்டங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மற்றும் காலவரையறைக்குட்பட்ட திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த லட்சியத் திட்டம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், பாட்னா, லக்னோ, புனே, நாக்பூர், வாரணாசி, கான்பூர், ஜெய்ப்பூர், போபால், இந்தூர், கொச்சி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, குவஹாத்தி, ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் உட்பட 48 முக்கிய நகரங்களை உள்ளடக்கியது.
2030-ஆம் ஆண்டுக்குள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதே ரயில்வேயின் இலக்கு, ஆனால் பயணிகளுக்கு உடனடிப் பலன்களை உறுதி செய்வதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாகத் திறனை விரிவுபடுத்தத் தொடங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு, தெளிவான காலக்கெடு மற்றும் விளைவுகளுடன் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “வளர்ந்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நெரிசலைக் குறைக்கவும், பல்வேறு நகரங்களில் உள்ள கோச்சிங் முனையங்களை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். மேலும், பிரிவு மற்றும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தி வருகிறோம். இது ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்கி, நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தும்” என்றார்.

