“ஆர்எஸ்எஸ் பற்றியோ, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான சனாதன சக்திகளின் தாக்குதலைப் பற்றியோ வாய் திறந்தாரா விஜய்? கொள்கை எதிரியை கண்டிக்க முடியாதா?” என்று விடுத்தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டில் உறுதியின்மை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுகவே காரணம் என்று குற்றம்சாட்டிய திருமாவளவன், “பாஜக இவ்வளவு ஆட்டம் போட காரணமே அதிமுகதான். இது மிகப்பெரிய தமிழினத் துரோகம்” என்று தெரிவித்தார். அதிமுகவின் கூட்டணி அரசியல் தமிழகத்தில் மதவாத சக்திகளை வலுப்படுத்தியுள்ளதாக அவர் விமர்சித்தார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியை பாராட்டிய திருமாவளவன், “பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த போதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார் கருணாநிதி. ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேட்டவர் அவர்” என்று கூறினார். கருணாநிதி போல கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.ஆனால், தற்போது அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகிவிட்டதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார். “தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற வைக்க அதிமுக உள்ளிட்ட கட்சிகள் துணை போகின்றன” என்று அவர் விமர்சித்தார்.
அதிமுகவின் தற்போதைய நிலை கருணாநிதியின் உறுதியுடன் ஒப்பிடும்போது முரண்பாடானது என்று சுட்டிக்காட்டினார்.“தமிழ்நாட்டில் பாஜக இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணமே அதிமுகதான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக இல்லாமல் போய்விடும்; பெரியார் அரசியலும் இல்லாமல் போய்விடும்” என்று திருமாவளவன் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
