வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், கடந்த 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரமாட்டோம் என தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், “தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி போட்டிக்காக இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்று இயக்குநர்கள் குழு முடிவு செய்தது.
வங்காளதேச வீரர்கள், அணியின் அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அணி பாதுகாப்பான சூழலில் போட்டியில் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்யவும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை அவசியம் என்று வாரியம் நம்புகிறது. ஐ.சி.சி இருக்கும் நிலைமையைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் விரைவாக பதிலளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தியாவில் பாதுகாப்பில்லை என கூறி தங்கள் அணி பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரிக்கை வைத்த நிலையில், இதுதொடர்பாக, ஜெய்ஷா தலைமையில் ஐசிசி கூட்டம் நடைபெற்றது. அப்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, விவாதிக்கவே முடியாது என ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாம். ஒருவேளை, டி20 உலகக் கோப்பையை புறக்கணித்தால், பெரிய அளவிலான தண்டனைகள் கிடைக்கும் எனவும் இந்த தொடரில் விளையாடவில்லையென்றால், போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்கும். இதனால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம் என ஐசிசி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
