இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜஸ்பிரித் பும்ரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா இதுவரை 34 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆகிய இந்திய வீரர்களின் மோசமான சாதனை பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த சச்சின் மற்றும் ரோகித் சர்மாவை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஜாகீர் கான் முதலிடத்தில் உள்ளார்.