இந்திய அணி தென்னாப்பிரிக்கா எதிரான தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வரும் என இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 30 ரன்களில் தோற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சுப்மன் கில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், அமைதியான கடல் எவ்வாறு வழி நடத்துவது என்பதை கற்றுக் கொடுக்காது, புயல் தான் உறுதியான கைகளை உருவாக்கும். நாம் சக வீரர்களை தொடர்ந்து நம்புவோம், ஒருவருக்கு ஒருவர் போராடி முன்னேறுவோம், வலுவாக மீண்டெழுவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடர் தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், இந்திய பயிற்சியாளராக எனது எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார். மேலும் தனது பயிற்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கைப்பற்றியதாகவும், இங்கிலாந்து மண்ணில் 2-2 என தொடரை சமன் செய்ததாகவும் பெருமிதம் கொண்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version