கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நூறு கோடி மான நஷ்ட ஈடு வழக்கில், கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர் நிறுவனத்துக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி தோனி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜீ தொலைக்காட்சி பதிலளித்தது.
ஆனால், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதி நக்கீரன் முன் விசாரணைக்கு வந்த போது, தோனி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. ஆர் ராமன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதிலளிக்கும் படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.