இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோன்று உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 7-ந் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் மேற்கொண்டனர். நள்ளிரவில் 25 நிமிடங்கள் நீடித்த இந்த வேட்டையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், அவர்களது உறவினர்களும் கொல்லப்பட்டனர். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள குப்வாரா, உரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வான்வழி தாக்குதலின் ஒருபகுதியாக ட்ரோன் தாக்குதல்களை இந்தியாவும் பாகிஸ்தானும் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைமைத் தளபதில் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப்படை ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மற்றொரு முக்கியமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதாவது பாகிஸ்தான் எல்லையில் இந்திய மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகியவற்றில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒருபக்கம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்துவது என்று ஆலோசனை, மறுபக்கம் எதிரி நாடு நம் மீது தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள வியூகம் என்று மத்திய அரசு பஹல்காம் தாக்குதலுக்கு படுபயங்கரமாக எதிர்வினை ஆற்றி வருகிறது.