38 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைப் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக கமலே இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். கூடவே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜிங்குஜிங்குச்சா என்று தொடங்கும் அந்த பாடலை கமலே எழுதி இருந்தார். அந்த பாடலுக்கு சிம்புவும், சான்யாவும் போட்ட ஆட்டம் நெட்டிசன்களால் வைரலானது. இதனைத் தொடர்ந்து பாடல் வெளியீட்டு விழா எப்போது என்ற எதிர்பார்ப்பு தொக்கிக் கொண்டது. மே மாதம் 16-ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இருதரப்பிலும் துப்பாக்கிச் சண்டையும், ஏவுகணை வீச்சுக்களும் நடந்து வருகின்றன. நமது வீரர்கள் உயிர் தியாகம் செய்து நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ஆடல், பாடல், கொண்டாட்டம் என்பது சரியாக வருமா என்ற யோசனை பல்வேறு தரப்பிலும் எழுந்தது. கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், போர் பதற்றம் காரணமாக ஒருவாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேபாணியில் வரும் 16-ந் தேதி நடைபெற இருந்த தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா, ஒத்திவைக்கப்படுவதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தான் முதன்மை, கலை காத்திருக்கட்டும் என்று கூறியுள்ளார். எல்லையில் ராணுவ வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர், அவர்களது குடும்பத்தினர் கவலையுடன் காத்திருக்கின்றனர், இந்த நேரத்தில் பொழுதுபோக்கு சரியல்ல என்று கூறியுள்ளார். பின்னர் ஒரு தேதி குறிக்கப்பட்டு அப்போது இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும் கமல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.