காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு முன்பே இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்ஹோகைன், நாட்டின் முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்க வென்றவரான லவ்லினா, தனது பிரிவில் நேரடியாக ‘பை’ (Bye) பெற்று கடைசி நான்கு இடங்களுக்குள் நுழைந்துள்ளதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். காமன்வெல்த் குத்துச்சண்டை விதிகளின்படி, அரையிறுதியில் தோற்கும் அனைத்து வீரர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்பதால், தனது முதல் போட்டிக்கு முன்பே லவ்லினா பதக்கத்தைக் கைப்பற்றயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, லவ்லினா தனது முதல் போட்டியில் ஜூலை 31 அன்று டி.கே.பி.பி. தாபகியை (T.K.B.P. Taafaki) எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்; ஒருவேளை தோல்வியடைந்தாலும் அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் உறுதியானது எப்படி? மகளிர் 75 கிலோ மிடில்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் மொத்தம் ஐந்து வீராங்கனைகள் மட்டுமே போட்டியிடுவதால், முதலாம் நிலை வீராங்கனையான லவ்லினா உள்ளிட்ட மூன்று பேருக்கு நேரடியாக அரையிறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள இரு வீராங்கனைகள் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.

இந்தியாவுக்கு உற்சாகமான தொடக்கம்: 2026 காமன்வெல்த் போட்டிகளுக்காகக் கிளாஸ்கோ நகருக்குச் சென்றுள்ள 126 பேர் கொண்ட இந்தியக் குழுவினருக்கு இந்த முதல் பதக்கம் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கிடையே, தொடக்க விழாவுக்கு முன்னதாக இன்று நடைபெறும் லான் பவுல்ஸ் (Lawn Bowls) போட்டிகளுடன் இந்தியாவின் அதிகாரப்பூர்வ போட்டிச் சுற்றுகள் தொடங்குகின்றன.

இந்த முறை தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், பவுல்ஸ் மற்றும் நீச்சல் ஆகிய 8 பொதுப்பிரிவு விளையாட்டுகளிலும், 5 மாற்றுத்திறனாளி (Para) விளையாட்டுப் பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள்.

ஜூலை 27-ல் தடகளப் போட்டிகள் தொடக்கம்: நீரஜ் சோப்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்கும் தடகளப் போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற உள்ளன. மேலும், பளுதூக்குதல் பிரிவில் ஒலிம்பிக் பதக்க வென்ற மீராபாய் சானு இந்தியாவின் பதக்க எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version