1. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

 

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் பிராவிஸ் 23 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சுப்மன் கில் (13), ஜோஸ் பட்லர் (5), ரூதர் போர்டு (0), ஷாருக்கான் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாய் சுதர்ஷன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

சென்னை அணியின் பந்துவீச்சில் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தத் தொடரை ஆறுதலுடன் நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இந்தத் தொடரில் 14 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி கடைசி இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும். புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஆட்டங்களில் 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version