உலககோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 48 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் நாடுகள் தவிர எஞ்சிய நாடுகள் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றே பங்கேற்க முடியும்.
இதுவரை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இருந்து ஜப்பான், ஈரான், தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகள் தேர்வாகி உள்ளன. சவுதி அரேபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் தேர்வாகி உள்ளது. அந்த கண்டத்தில் இருந்து நியூசிலாந்தும் உலக கோப்பையில் களம் காண்கிறது. தென்அமெரிக்க நாடுகளில் இருந்து நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள பிரேசில், ஈகுவடார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலக கோப்பை தொடரின் தொடக்கப் போட்டி உள்பட மொத்தம் 5 போட்டிகள் மெக்சிகோவின் புகழ்பெற்ற அஸ்டெக் நகர மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த அரங்கம் நவீன வசதிகளுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.
மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன. மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஜுலை மாதம் 19-ந் தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.
