சொந்த மண்ணில் சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் புரிந்து கொள்வார் என நம்பவுதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 124 ரன்கள் என்ற குறைந்த இலக்கை அடைய முடியாமல், 30 ரன்கள் வித்தியாசத்தில் 3வது நாளிலேயே இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், ஆடுகளம் குறித்தும் இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடும் போது, சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஷமி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு ஷமி தகுதியானவர் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை 3 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதை நினைக்காமல், 5 நாட்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை கம்பீர் புரிந்துகொள்வார் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
