தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியோடு 6 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் போல அல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலில் மக்களால் நேரடியாக வாக்களிக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பார்கள்.
34 எம்எல்ஏக்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற கணக்கீட்டில் எம்.பி. தேர்ந்தெடுக்கப்படுவார். காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர் போட்டியிடும்பட்சத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். காலியாகும் இடங்களுக்கேற்ப அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
இந்தநிலையில், தமிழகத்தில் என்.ஆர். இளங்கோ (திமுக), பி.செல்வராசு(திமுக), எம்.தம்பிதுரை (அதிமுக), திருச்சி சிவா (திமுக), கனிமொழி என்.வி.என் சோமு(திமுக), ஜி.கே.வாசன்(தமிழ் மாநில காங்கிரசு) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆறு இடங்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வேட்பு மனு தாக்கல் வரும் 26ம் தேதி தொடங்கி மார்ச் 5 வரை நடைபெறும் என்றும் மார்ச் 6ல் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மார்ச் 9ம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மார்ச் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதேபோல், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்குவங்கம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியையும் ஆணையம் அறிவித்துள்ளது.

