இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.எல்.டி.20 லீக் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். மேலும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஜாம்பவான் அனில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்வின். மேலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 7-வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்து அதிர்ச்சியை அளித்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அஸ்வின் வாங்கப்பட்டிருந்தார். எனினும் அந்த தொடரில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அணி நிர்வாகம் அதிருப்தியில் இருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் தனது பெயரை ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு செய்திருந்தார். தனது அடிப்படை விலையை ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் என அஸ்வின் நிர்ணயித்திருந்தார். வீரர்களுக்கான ஏலம் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.

இதில் அஸ்வின் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு அணியும் அஸ்வினை வாங்க முன்வரவில்லை. ஒரு வேலை அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார்.

எனினும் அஸ்வின் வரும் நவம்பர் மாதம் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் பிக் பாஸ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஎல்டி20 லீக் சீசன் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version