பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப் பிழைத்து இலக்கை அடைந்த இளைஞர்களின் கதைதான் ‘பைசன்’ திரைப்படம் என்று அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் பைசன். இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் ’பைசன்’ படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “என் திரை வாழ்க்கையில் பைசன் முக்கியமான படம். பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப் பிழைத்து இலக்கை அடைந்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”.

மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன்.

இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது. பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன், நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இந்தக்கதையை அவ்வளவு எளிதாக ரெகுலர் சினிமா சூட்டிங் மாதிரி பண்ணிவிட முடியாது, ஒருவருடம் பயிற்சி செய்து முழு கபடி வீரராக, தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாறுவதும், கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படம் துவங்கி கொஞ்ச நாளில் துருவால் முடியவில்லை. ரொம்ப சிரமப்பட்டார். வேறு கதை பண்ணிடலாமான் என்று அவரிடம் கேட்டேன்.

“இல்லை கஸ்டமாத்தான் இருக்கு, நீங்களும் இந்த படம் பண்ணனும்னு வெறியா இருக்குறீர்கள், உங்களுக்கு கனவுப்படம் என்று தெரியுது, நான் உங்களை அப்பா மாதிரி நினைச்சுகிட்டு வரேன், நீங்க என்ன பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை அசைத்துப் பார்த்துவிட்டன.

அவருக்கு எதுவும் நடந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டேன். நான் மற்றபடங்களை விட அதிகபட்சமான உழைப்பை போட்டேன். எல்லாவற்றையும் நல்லபடியாக செய்து முடிப்பேன் என்று நம்பினான். மொத்த குடும்பமும் நம்பியது. எல்லா நடிகர்களும் இதை செய்ய மாட்டார்கள். இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக அர்பணித்திருக்கிறார் துருவ். படம் பார்த்தால் இதன் அசல் தன்மை தெரியும்.

தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார். அவரின் சினிமா ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள். அதை கேட்ட எனக்கும் துருவுக்கும் பெரும் மகிழ்ச்சி.. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version