தேசத் தந்தை மகாத்மா காந்தி மறைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் காலத்து அரசியல் இன்றைக்கு இல்லை. அவர் காலத்துச் சமூகம் இன்றைக்கு இல்லை. அவர் காலத்து மனிதர்கள் இன்றைக்கு இல்லை. ஆனாலும் சமூக வளர்ச்சிக்காகவும் தனிமனித எழுச்சிக்காகவும் காந்தியடிகளின் கோட்பாடு கொள்கைகள் இன்றளவும் நமக்குத் தேவையாக உள்ளன. அதனாலேயே இன்றும் நமக்கு மகாத்மா காந்தி தேவைப்படுகிறார்.

காந்தியடிகளை மீட்டுருவாக்க அவரது கொள்கைகளைப் புரிந்து கொள்வதும் கோட்பாடுகளைப் பின்பற்றுவதும் தான் உரிய வழியாகும். அதன் அடிப்படையில் இன்று நமக்கு காந்தியடிகளிடம் இருந்து படிப்பினைகளாகக் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

அகிம்சை என்றால் அவர் மட்டும்தான்:

அண்மைக் காலங்களில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் வன்முறையால் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் உண்மையான சுதந்திரம் என்பது வன்முறையால் ஒரே இரவில் கிடைப்பதல்ல. அது அகிம்சை என்னும் அறத்தால் உருவாக்கப்படுவது.

அநீதிக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தாமல், அகிம்சை வழியில் எதிர்க்கும் சத்யாகிரகப் போராட்டத்தை இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கினார் காந்தி. பயங்கரவாத தாக்குதலை விட அகிம்சை வலிமையானது என்பதை உணர்த்தினார். அவருக்கு ஆப்பிரிக்காவில் கிடைத்த இந்த அகிம்சை ஒளி, இந்திய விடுதலைக்கு மட்டுமன்றி, அதற்குப் பின்னும் இன்றுவரை நமக்குச் சிறந்த பாடமாகத் திகழ்கிறது. சர்வதேச அளவிலும் இவரது அறப்போராட்ட நெறி வெற்றியைத் தேடித் தந்தது என்பதற்கு அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வரலாறே சான்று.

சமூக சீர்த்திருத்தவாதி:

மகாத்மா காந்தியடிகள், தாய்திரு நாட்டையும், அதன் கலாச்சாரத்தையும் நேசித்தார். அதேநேரம் இந்திய சமூகத்தில் மண்டிக் கிடந்த சாதி, மத தீண்டாமை முட்புதர்களை அகற்றவும் போராடினார். சாதி கொடுமைகளால் மக்கள் பிளவுபட்டுக் கிடக்கையில், பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து மட்டும் சுதந்திரம் கிடைத்தால் போதுமா?. அதுதான் சுதந்திரமா? என்றுணர்ந்து இரண்டுக்கும் சேர்த்து ஒரேநேரத்தில் போராடினார். இன்றைக்கும் எரிகின்ற சாதி தீயை அணைக்கும் சீர்திருத்த வேள்விக்கு அன்றைக்கே அண்ணல் காந்தி அடித்தளமிட்டார். இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்திற்காக போராடி அதற்காக தனது உயிரையும் தந்தார் காந்தி.

பெண்ணியவாதி:

ஒரு பெண் கழுத்தில் நகை அணிந்து கொண்டு நள்ளிரவில் தனியாக நிம்மதியாக நடந்து செல்லும் நிலை எப்போது வருகிறதோ அப்போதுதான் உண்மையான விடுதலை என்றார் காந்தியடிகள். வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களைப் போராட்டக் களத்தில் பங்கேற்க வைத்தவர் காந்தி.

இன்றைக்கு பெண்கள் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதற்கு காந்தியும் முக்கிய காரணம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்திய காந்தி, தனது மருமகள்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என 4 மகன்களுக்கும் அறிவுறித்தினார்.

எல்லோருக்குமான காந்தி:

குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட காந்தி, பாரத நாட்டின் அனைத்து மொழிகளையும் நேசித்தார்.

பொதுவாழ்வில் அவருக்கு உறுதுணையாக இந்துக்கள் , முஸ்லிம்கள், பார்சிக்கள், குஜராத்திகள், தமிழர்கள் எனப் பலரும் இருந்தனர். தமிழர்கள் மீது வைத்த பேரன்பு காரணமாக தமிழ் மொழியை எழுத, படிக்க கற்றுக்கொண்டார் காந்தி. சுதந்திரத்திற்காக முன்வந்து போராடிய தமிழர்கள் உடன் காந்தியின் உறவு இரத்தப் பாச உறவு போன்றது. இதை அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுடனும் துணை நின்று அவர்களின் எழுச்சிக்காக ஹரிஜன சேவக் சங்கத்தையும் நிறுவினார் மகாத்மா காந்தி.

இந்திய இயற்கைப் மருத்துவத்தின் தந்தை:

இப்போது புது புதிதாக நோய்களும் அதற்கான மருந்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இயற்கை மருத்துவம் அரிதாகிவிட்டது. ஆனால் காந்தியடிகள், இயற்கை மருத்துவத்தையே பெரிதும் நம்பினார். இந்திய இயற்கை மருத்துவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் காந்தி. “மனிதனுக்கு மருந்து உட்கொள்ள வேண்டிய அவசியம் மிகக் குறைவு என்று நம்புகிறேன். ஆயிரத்தில் 999 நோய்களை உணவுமுறை, நீர், மண் சிகிச்சை போன்ற வீட்டு வைத்தியம் மூலம் சரிசெய்ய முடியும்” என்கிறார் காந்தி. அதனால்தான் அவரை இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தை என்று போற்றுகிறோம்

சுதேசி:

வெளிநாடுகளையே எத்தனை நாட்களுக்கு நம்பி இருப்பது. குண்டூசி முதல் ஏவுகணை வரை உள்நாட்டு தயாரிப்பு என்ற தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி பாரதம் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1906-ல் சுதேசி கப்பலை இயக்கினார் வஉசி. வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அந்த மாபெரும் கனவின் அடிப்படையில் கதர் ஆடை இயக்கத்தை 1918-ல் தொடங்கினார் காந்தியடிகள். இந்தியாவை வெளிநாட்டுப் பொருட்களில் இருந்து விடுவிக்கவும், இந்தியர்களுக்கு தங்கள் கலாச்சாரத்தின் மீது பெருமையை ஏற்படுத்தவும் காந்தியின் கதர் இயக்கம் பயன்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version