இயல், இசை, நாடகம் என முத்தமிழும் பெருமிதம் கொள்ளும் கலைஞர்களின் மூத்தோன் யார் எனக் கேட்டால், அது சிவாஜி கணேசனாகதான் இருக்க முடியும். ஏழு வயது சிறுவனாக மேடை நாடகத்தில் அறிமுகமான கணேசன், பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்து சிலிர்க்க வைத்தார். இதனை கண்டு வியந்த தந்தை பெரியார், சிவாஜியாக நடித்த கணேசனை, சிவாஜி கணேசன் என பாராட்ட, பின்னர் அதுவே அவரது பெயராகி போனது. அங்கிருந்து தொடங்கிய சிவாஜி கணேசனின் எழுச்சி, பராசக்தி படத்தில் நாயகனாக அறிமுகமான பின்னர், இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.
மனோகரா, உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, பாவ மன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா என படத்துக்குப் படம் நவரசங்களிலும் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல், இந்தியளவிலும் நடிப்பு என்றால் அது சிவாஜி கணேசன்தான் என திரை கலைஞர்களே கொண்டாடித் தீர்த்தனர். அப்படி நடிப்பின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த சிவாஜியின் தனித்துவங்களில் முதன்மையானது அவரது சிம்மக்குரல்தான். காதல், கருணை, வீரம், சோகம் என எந்தவிதமான உணர்ச்சிகள் என்றாலும், அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிடும் கலைஞனாக ஜொலித்தார் சிவாஜி.
அதேபோல், சினிமா வசனங்களில் தமிழ் மொழியை சிவாஜி லாவகமாக கையாண்ட விதம், அவரை இன்னும் உச்சம் கொண்டு சென்றது. பராசக்தி இலக்கிய நயமென்றால், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வேறொரு தளத்தில் நின்று அசுர பாய்ச்சல் நிகழ்த்தியிருப்பார். இதேபோல் பாசமலர், கர்ணன், திருவிளையாடல், தில்லான மோகனாம்பாள் என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ரகம். ஆனாலும் சிவாஜியின் நடிப்பிலும் வசன உச்சரிப்புகளிலும் செயற்கைத்தனம் தான் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழாமல் இல்லை. விடாமல் விரட்டி வந்த இந்த விமர்சனங்களுக்கு ஒரே படத்தில் பதிலடி கொடுத்தார் சிவாஜி கணேசன்; அதுதான் முதல் மரியாதை!
பாரதிராஜா, இளையராஜா என இரண்டு ராஜாக்களும் இணைந்து கட்டியெழுப்பிய முதல் மரியாதை என்ற காவியத்தை, தனது திரையுலக பயணத்தின் வைர மகுடமாக சூட்டிக் கொண்டார் சிவாஜி. அரை சிட்டிகை கண் அசைவிலும், ஒரு தேக்கரண்டி உதட்டுப் பிதுக்கலிலும், ஓராயிரம் உணர்ச்சிகளை கடத்திவிடுவதில் சிவாஜிக்கு நிகராக இன்னொரு கலைஞரை அடையாளம் காட்டுவது, கடலில் விழுந்த மழைத் துளியை வடிகட்டுவது போலாகும். அப்படி தமிழ்த் திரையுலகில் நடிப்புச் சக்கரவர்த்தியாக வலம் வந்த சிவாஜி கணேசனின் 97வது பிறந்த தினம் இன்று.