ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை போல, இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எஸ். விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இணையத்தில் ஆபாச படங்கள் தாராளமாக உலாவுகின்றன. இதுபோன்ற ஆபாச படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் பாழாகும் நிலை உள்ளது.

எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான மென்பொருளை பயன்படுத்துமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலாளர்கள், இணைய சேவை வழங்கும் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவானது, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக தங்கள் வாதங்களை எடுத்துரைத்தன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அவர்கள் கூறுகையில், “மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்களை தடுக்க வழிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய மென்பொருள் அவசியம் தேவை.

இதுபோன்ற ஆபாசமான, அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமையை சார்ந்தது. இருந்தபோதிலும், இதுபோன்ற வீடியோக்களை குழந்தைகள் பார்த்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

எனவே, ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை போல, இந்தியாவிலும் மத்திய அரசும் கொண்டு வர வேண்டும். அதுவரையில் இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version