இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு இருப்பது போன்ற ரசிகர் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு இருக்குமா என்றால் அது கேள்விக் குறி தான். இப்போது உள்ள சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, தோனி இந்திய அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்த கோப்பைகளே இதற்கு காரணம் எனக் கூறலாம். எத்தனையோ பேட்டர்கள், பவுலர்கள் வரலாம் ஆனால் ஒரு கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு கிரேஸை வைத்திருகிறார் தோனி.
இந்திய அணிக்காக 3 ஐ.சி.சி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதேப் போல ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்றுக் கொடுத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். அதனாலேயே இவரது ரசிகர்கள் ஐபிஎல்லில் குவிவார்கள்.
குறிப்பாக இவர் களத்தில் இறங்கும் போது, ரசிகர்கள் எழுப்பும் ஆராவாரமும், விசில் சத்தமும் அப்பகுதியையே திருவிழா கோலம் ஆக்கிவிடும் எனலாம். தோனியைப் போலவே விராட் கோலி, ரோகித் சர்மா என பலருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் தான். அப்படியிருக்க தோனிக்கு மட்டும் தான் உண்மையான ரசிகர்கள் இருப்பதாக, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
“தோனி அவரால் முடிந்தவரை விளையாட லாம். அது எனது அணியாக இருந்திருந்தால், நான் வேறு முடிவை எடுத்திருப்பேன்.ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவருக்கு உண்மையான ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் உணர்கிறேன். மீதமுள்ளவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தை சார்ந்துள்ளார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். இதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால் விவாதம் வேறு திசையில் செல்லும்” என்று கூறியுள்ளார்.