கே.எல். ராகுல் ஒரு நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர், அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. ராகுல் போன்ற ஒரு முக்கிய வீரர், தன்னை அணிக்கு முக்கியமானவராகக் கருதவில்லை என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் ‘தி ஸ்விட்ச், கெவின் பீட்டர்சன்’ என்ற யூடியூப் சேனலில் நடந்த உரையாடலில் பேசினார்.
பீட்டர்சனுடனான உரையாடலில் கே.எல். ராகுல் கூறியதாவது,”மக்களின் கிரிக்கெட் மீதான மோகத்தால் நான் கிரிக்கெட்டை நேசிக்கத் தொடங்கவில்லை. நான் அதை இயல்பாகத் தேர்ந்தெடுத்தேன். என் அப்பா கிரிக்கெட் விளையாடுவார். வீட்டில் அனைவரும் கூடும் நேரங்களில், ஆண்கள் எல்லோரும் கிரிக்கெட் ஆடுவார்கள். அப்பா எனக்கு பந்து வீசுவார்; நான் அதை நாள் முழுக்க சந்தோஷமாக விளையாடுவேன். அந்த மகிழ்ச்சிதான் என்னை கிரிக்கெட்டுடன் இணைத்தது. ஒருவேளை, கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக விதியிலேயே எழுதப்பட்டிருக்கலாம்” என்று ராகுல் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல், “நான் என்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைப்பதில்லை. மக்கள் என்னை பாராட்டும்போது கூட சற்று சங்கடமாக உணர்கிறேன்” என்று வெளிப்படையாக கூறினார். தான் நடத்தி வரும் அறக்கட்டளை குறித்து பேசிய அவர், “எனக்கு இந்த வாய்ப்புகள் எப்படி கிடைத்தன என்பதை முதலில் என்னிடமே நான் விளக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிகிறது. கிரிக்கெட் மூலமாகவே இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைத்ததால், பலரும் நேரடியாக என்னை அணுகுகிறார்கள்” என்றும் ராகுல் தெரிவித்தார்.
ஓய்வு குறித்து ராகுல் என்ன கூறினார்?இந்தியாவில் ஓய்வு (ரிட்டையர்மெண்ட்) பற்றி யோசிப்பது தான் மிகவும் கடினமான விஷயம் என்று கெவின் பீட்டர்சன் கூறியதற்கு, கே.எல். ராகுல் அமைதியாகவும் ஆழமாகவும் பதிலளித்தார். “அதைப் பற்றி யோசிக்கும் போது, நீங்களே உங்களிடம் நேர்மையாக இருந்தால் அது அவ்வளவு கடினமல்ல. ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தால், அது தானாகவே வரும். அதை தேவையில்லாமல் இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் அதற்கு நேரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நான் பல முறை காயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அதிலிருந்து மீண்டு வருவது எந்த வீரருக்கும் கடினமான போராட்டம். ஒரு கட்டத்தில் விடுவதை ஏற்றுக் கொள்வதும் மனதளவில் ஒரு பெரிய சவால்தான்” என்று ராகுல் கூறினார்.
மேலும், “கிரிக்கெட் உங்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அது நீண்ட காலம் உங்களுடன் இருக்கும். அதனால் ஒரு கட்டத்தில் அதை விட்டுவிடத் தெரிந்திருக்க வேண்டும். உங்களிடம் இருப்பதை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். உங்கள் குடும்பம் உங்களுடன் இருக்கிறது. அதுவே வாழ்க்கையின் உண்மையான பலம்” என்று ராகுல் கூறினார்
நான் அவ்வளவு முக்கியமானவன் அல்ல: கே.எல். ராகுல் மேலும் கூறுகையில், “உங்களுக்குத் தெரியுமா? “உண்மையா சொன்னா, நான் என்னைத் தான் அடிக்கடி சமாதானப்படுத்திக்கொள்வேன் – நான் அவ்வளவு முக்கியமான வீரன் இல்லைன்னு. நம் நாட்டிலும் உலகம் முழுக்கவும் கிரிக்கெட் தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த எண்ணம் எனக்கு முன்பே இருந்தது. ஆனால், என் முதல் குழந்தை பிறந்த பிறகு, வாழ்க்கையைப் பார்க்கும் என் பார்வை முழுமையாக மாறிவிட்டது” என்று ராகுல் கூறினார்.
