இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 17) லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் பேட்டிங்கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அகியோர் வலுசேர்க்கும் நிலையில், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழத்தொடங்கியுள்ளன. பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கும் பேட்டிங் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் அந்த அணியில் குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் இதுவரையிலும் பெரிதாக ரன்களைச் சேர்க்கவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி, ஓட்னியல் பார்ட்மேன் உள்ளிட்டோருடன், டோனவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோரும் பக்க பலமாக இருக்கின்றன. இருப்பினும் அந்த அணி பேட்டிங்கில் முன்னேற்றம் காணும் வரையில், வலுவான இந்திய அணியை வீழ்த்தியது கடினம் தான்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
மேலும் இந்தியாவில் இவ்விரு அணிகளும் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் தென்னாப்பிரிக்க அணி 7 முறையும், இந்தியா 7 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு போட்டியின் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 9 சர்வதே சடி20 போட்டிகள் நடைபெற்றுள்ள. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், சேஸிங் செய்த அணிகள் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
