2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்திக்கொள்ள காமன்வெல்த் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஒலிம்பிக்கிற்கு அடுத்ததாக காமன்வெல்த் திகழ்கிறது.
முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930 ஆம் ஆண்டு கனடாவின் ஹாமில்டனில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி, 2030 ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டது. அதன்படி, காமன்வெல்த் கூட்டமைப்புக்கு விண்ணப்பித்த இந்தியா அகமதாபாத்தை முன்மொழிந்தது.
இதுபோன்ற பல்வேறு விண்ணப்பங்களை 74 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு மதிப்பீடு செய்தது. இந்நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத்தில் நடத்த ஒப்புதல் அளித்து இன்று (நவ.26) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடைசியாக 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து மீண்டு் தற்போது இப்போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2030 ஆண்டோடு காமன்வெல்த் தனது நூற்றாண்டை நிறைவு செய்வதால், அந்த போட்டி இந்தியாவில் நடப்பது சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டுத் தலைவர் டொனால்ட் ருகரே, “இளைஞர்களின் லட்சியம், வளமான கலாச்சாரம், விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவற்றை இந்தியா மேம்படுத்தி வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அடுத்த நூற்றாண்டை நல்ல ஆரோக்கியத்துடன் தொடங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியா 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை அகமதாபாத்தில் நடத்தவும் இலக்காக கொண்டுள்ளது. அதற்காக அங்கு கடந்த பத்தாண்டுகளாக விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், 2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடத்த அனுமதி கிடைத்திருப்பது, ஒலிம்பிக்கை நடத்தும் லட்சியத்தையும் வலுப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டாவியா, ” நூறாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்துவது மதிப்புமிக்க தருணமாகும். இந்தியா முக்கிய நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்ட நாடாக திகழ்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் முதல் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் சிறந்த 5 நாடுகளில் இந்தியா ஒன்றாக இருக்கும்.” என்றார்.
