வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (அக்-2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார்.
இந்திய அணி தரப்பில் முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் தனது 11ஆவது சதத்தை நிறைவு செய்த பின், வாரிகன் பந்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, 190 பந்துகளில் சதத்தை கடந்த துருவ் ஜூரல் 125 ரன்களில் வெளியேறினார். அபாரமாக ஆடிய ரவீந்திர ஜடேஜாவும் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாளில் இந்திய அணி தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து, 286 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாகநரைன் சந்தர்பால் (14), ஜான் காம்பெல் (8), பிரண்டன் கிங் (5), ரோஸ்டன் சேஸ் (1), சாய் ஹோப் (1) என அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிகப்பட்சமாக அலிக் அதன்ஷெ 38 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 25 ரன்களும், ஜேடன் சீல்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், முஹமது சிராஸ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது சதம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது.