இந்த ஆண்டு நடைபெற்று வரும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நடப்புத் தொடரின் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.04 பில்லியனை (104 கோடி) கடந்து வியக்கவைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 7.4 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக, தொடக்க வாரத்திலேயே 51.5 கோடி பேர் நேரலையில் கண்டு களித்தது ஒரு தனி சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 26 போட்டிகள் மீதமுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் போட்டி மற்றும் ப்ளே-ஆப் சுற்றுகள் தொடங்க உள்ளதால், இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் பல கோடிகளைத் தாண்டி புதிய உலக சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களில் இலவசமாகப் பார்க்கும் வசதி மற்றும் கனெக்டட் டிவி (CTV) மூலம் உயர்தர அனுபவம் கிடைப்பதே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
