நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாடாத ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். நடப்பு சீசனில் அதிரடியான தொடக்கத்தை வழங்கி வந்த இந்த ஜோடி, இம்முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யாஷ் தயாள் பந்துவீச்சில் பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன்சிங் 18 ரன்களில் வெளியேறினார்.
பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெறும் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய சுயாஷ் சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.