இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். மிக நிதானமாக ஆடத்தொடங்கிய இருவரும் வாய்ப்புள்ள பந்துகளை மட்டும் ரன்களாக மாற்றினர். 42 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பொறுப்புடனும், நிதானமாகவும் விளையாடியது. அதேசமயம், ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். 155 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்சர், 16 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இது அவரது 5-வது சதமாகும். சதமடித்த நிலையில் 101 ரன்கள் எடுத்தபோது ஸ்டோக்ஸ் பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன்போல்டாகி வெளியேறினார்.
ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் நாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் தான் ஆடிய முதல் போட்டியில் சதத்தினை அடித்து அசத்தியிருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்தியா இதுவரை இங்கிலாந்தில் ஆடிய தொடர்களில் முதல் போட்டியை வென்றதில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை சதமடித்த போட்டிகளில் இந்தியா தோற்றதுமில்லை. இரண்டில் எது நடக்கப் போகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.