21 வயதுக்கு உட்பட்டோருக்கான 14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நேற்று (நவ. 28) தொடங்கியது. டிசம்பர் 10ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. 6 பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ் கோர்சில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மதுரையில் நேற்று (நவ. 28) காலை தொடங்கிய முதல் லீக் போட்டியில் ஜெர்மனி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் வார்விக் 19வது மற்றும் 56வது நிமிடங்களிலும், பென் ஹாஸ்பேச் 43வது நிமிடத்திலும், பால் கிளான்டெர் 44வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கனடாவை போராடி வீழ்த்தியது. ஸ்பெயின் மற்றும் எகிப்து அணிகள் மோதிய போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் நமிபியாவை 12-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தியது.
சென்னையில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் சீனாவையும், சுவிட்சர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஓமனையும் தோற்கடித்தன.
உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, 18ம் நிலையில் உள்ள சிலி அணியை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாக ஆதரவுடன் இந்திய வீரர்கள் துடிப்புடன் ஆடினர். முதல் கால்பகுதியில் சிலி அணியின் தடுப்பு வளையத்தை மீறி இந்திய வீரர்களால் கோல் அடிக்க தடுமாறினர். இருப்பினும் 16வது நிமிடத்தில் இந்தியாவின் ரோசன் குஜூல் கோல் அடித்து அசத்தினார். 21வது நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் போட்டார். அதனைத்தொடர்ந்து தில்ராஜ் சிங் 24வது மற்றும் 34வது நிமிடங்களிலும், அஜீத் யாதவ் 35வது நிமிடத்திலும், அன்மோல் எக்கா 48வது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினர்.
கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ரோகித் கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.
