கர்நாடகா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்ற குரூப் டி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை வென்ற தமிழ்நாடு அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணிக்கு சரத் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் அகர்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்திய சரத் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விகெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயரும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்மாறன் ரவிச்சந்திரன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 102 ரன்களைச் சேர்த்தார்.
அவருடன் இணைந்து விளையாடி வந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் 46 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் கர்நாடகா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 245 ரன்களைக் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணிக்கு அமித் சாத்விக் – துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாத்விக் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 8 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா 29 ரன்களுக்கும், நாராயண் ஜெகதீசன் 21 ரன்களிலும், ராஜ் குமார் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களாலும் கர்நாடகாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக தமிழ்நாடு அணி 14.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடகா தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால், பிரவீன் தூபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் கர்நாடகா அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கர்நாடகா அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அணி தங்களின் மூன்றாவது தோல்வியைத் தழுவி 4 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
