கடந்த 3 ஆண்டுகளில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியதுபோல சிறப்பாக விளையாடியது இல்லை என இந்திய அணி வீரர் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டித் தொடரில் விராட் கோலி, 3 போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். முதல் 2 போட்டிகளில் 2 சதங்கள், 3வது போட்டியில் ஒரு அரைசதம் விளாசினார்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள விராட் கோலி, கடந்த 2-3 ஆண்டுகளில் இதுபோல சிறப்பாக தாம் விளையாடியதில்லை என்றும், தெ.ஆப்பிரிக்க தொடரில் தாம் வெளிப்படுத்திய ஆட்டம் திருப்திகரமாக இருந்தது என்றும் தெரிவித்தார். எந்தவித நெருக்கடியும் இன்றி, மிகவும் சுதந்திரமாக விளையாடியதாகவும், இதுவும் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்றும் கோலி குறிப்பிட்டார்.
3வது வீரராக களமிறங்கியபோதிலும், நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்வதாக நினைத்தே ஆடியதாகவும், இதுவும் நிலையான ஆட்டத்திற்கும், அதிக ரன்களை குவிக்கவும் காரணமாக அமைந்தது என்றும் கோலி கூறினார்.
