2023 – 2025 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நடப்புச் சாம்பியன் அணியான தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ( 1-1 ) என்ற கணக்கில் சமன் செய்து, தற்பொழுது இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

முதலாவதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சுப்மன் கில் தலைமையில் இளம் பட்டாளத்துடன் இந்திய அணி நடப்பு சாம்பியன் அணியான தென்னாப்பிரிக்க அணியை சவால் மிக்க மைதானத்தில் எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். போட்டியின் ஆரம்பத்திலிருந்து மைதானத்தின் பிட்ச் கடினமாகத்தான் இருந்தது. பவுன்ஸ் விகிதம் சற்று நேர்மாறாக தான் இருந்தது. இதனாலேயே தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் சற்று தடுமாறியது. ஆரம்பத்தில் கூறியவாறு பிட்ச் பவுலர்களுக்கு சாதமாக அமைய, ஜஸ்பிரித் பும்ரா வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் 159 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெடுகளை கைப்பற்றினார்.

பின்னர் விளையாட தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று கவனமாக விளையாட தொடங்கினாலும். ஹார்மர் மற்றும் யான்சென் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 189 ரன்களுக்கு ஆட்டும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் கில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று 39 ரன்கள் சேர்த்தார்.

30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முதல் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்ற, பின்னர் வரிசையாக 4 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை கதிகலங்க வைத்தார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கடைசிவரை தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் 55* ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா அணி 153 ரன்கள் எடுத்தது.

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாரானது. முதல் இன்னிங்ஸில் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட முடியாமல் போக, ஒரு வீரர் இல்லாமல 10 வீரர்களுடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது.

எளிய இலக்கு என்றாலும் மைதானத்தில் தன்மை சற்று சவாலாக இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை தனது ஓவர்களில் யான்சென் கைப்பற்ற, இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

வாஷிங்டன் சுந்தர் ஒரு பக்கம் நிலைத்து நின்றாலும் மற்ற பக்கத்தில் இருந்த வீரர்களின் விக்கெட்டுகளை ஹார்மர் கைப்பற்ற, வெறும் 93 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுந்தர் 31 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது தென்னாப்பிரிக்க அணி 1- 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.25 ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்கா அணி, குறுகிய ரன்களுக்கு எதிரணியை ஆட்டமிழக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எளிய இலக்கு என்றாலும் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க மிக முக்கிய காரணமாக அமைந்தது. மைதானத்தின் பிட்ச் ஒரு பக்கம் இருந்தாலும், கேப்டன் கில் இல்லாதது ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அணியின் நம்பிக்கை வீரரான ரிஷப் பண்ட் 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது, இந்திய வீரர்கள் மைதானத்தின் தன்மையை உணர்ந்து ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்ததும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்திய அணி குவகாத்தியில் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வரும் 22 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version