இடஒதுக்கீட்டு முறையை கண்டித்து போராடியவர்களுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேச அரசுக்கும், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான இந்த போராட்டத்தை வங்கதேச அரசு தீவிரமாக ஒடுக்கியதால் போராட்டம் வன்முறையாக மாறியது.

தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பதற்றம் அதிகரித்ததை உணர்ந்த வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப் படுகொலை, ஊழல் உள்பட ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடியவர்களை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானதை ஆதாரமாக வைத்து அவர் மீதும், முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீதும் மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதிய வழக்கை பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் ஐஜி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என இன்று (நவ. 17) தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சேக் ஹசீனா மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கானுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  வழக்கில் தொடர்புடைய காவல்துறை ஐ.ஜி சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் கடந்த ஜூலை மாதம் வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளநிலையில், டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வங்கதேச ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பரபரப்பான சூழலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள “ஷேக் ஹசீனவை” ஒப்படைக்க கோரி இந்திய அரசுக்கு வங்கதேச அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் வழங்குவது கடுமையான விரோதச் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனையை ஏற்க ஷேக் ஹசீனா மறுத்துள்ளார். தனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என கூறியுள்ள அவர், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத அரசால், ஒரு மோசடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த தீர்ப்பு பாரபட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொண்டது என ஹசீனா தெரிவித்துள்ளது வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version