ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் மதன் லால் வலியுறுத்தியுள்ளார்.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ம் தேதி பாகிஸ்தானையும், 19-ம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், “திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலைக் கொடுக்கும் அணியாக இருக்கிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.

குல்தீப் யாதவின் தனித்துவமான பந்துவீச்சு பாணி காரணமாக அவர் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். அவரது பந்துவீச்சை டி20 கிரிக்கெட்டில் எதிர்கொள்வது கடினம். அவருடைய தேர்வு பற்றிய இறுதி முடிவு பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும். துபாயில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version