அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிவரும் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது.
இந்த 6 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றிய நேதன் லயன் புதிய ஆஸ்திரேலிய சாதனை புரிந்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளென் மெக்ரா கைப்பற்றிய 563 விக்கெட்டுகள் என்ற சாதனையைக் கடந்தார். இப்போது ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்க, நேதன் லயன் 564 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அவுட் ஆனவுடன் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சரிடம் ஆவேசமாக எதையோ பேசினார். ஃபுல் லெந்தில் வீசாமல் ஏன் பேட்ஸ்மெனுக்கு ரூம் கொடுத்து அனாவசியமாக காலையில் வந்தவுடன் 6-7 பவுண்டரிகளை கொடுக்க வேண்டும் என்று சத்தம் போட்டிருப்பார் போல் தெரிந்தது. ஸ்காட் போலண்ட் 14 ரன்களையும் நேதன் லயன் 9 ரன்களை எடுத்து இன்னொரு ஆர்ச்சர் ஃபுல் லெந்த் பந்தில் எல்.பி.ஆக ஆஸ்திரேலியா 371 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. ஆர்ச்சர் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஷஸில் இவர் கைப்பற்றும் 3-வது 5 விக்கெட்டுகள் ஆகும் இது. ஆஸ்திரேலியாவில் முதல் 5 விக்கெட்.
இதனையடுத்து 10-வது ஓவரிலேயே நேதன் லயனைக் கொண்டு வந்து மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார் கேப்டன் பாட் கமின்ஸ். நேதன் லயன் பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் வீச, ஆலி போப் அதை முன் காலினை முன்னால் குறுக்காகப் போட்டு தடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால் இவரெல்லாம் மாடர்ன் கிரிக்கெட்டர் ஆயிற்றே. மட்டையை நீட்டி பிளிக் ஆடி லெக் திசையில் ஆட முயன்றார். அங்கு ஏற்கெனவெ செட் செய்த இடத்தில் இங்லிஸ் நிற்க அவர் கையில் போய் உட்கார்ந்தது, மோசமான ஷாட் தேர்வு, பாட் கமின்ஸின் அதியற்புத கேப்டன்சி. கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டை சமன் செய்தார் நேதன் லயன்.
அதே ஓவரில் பென் டக்கெட் பெரிய தவறு செய்தார். பந்து பிட்ச் ஆகித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது. கிளீன் பவுல்டு, அற்புதமான பந்துதான், ஆஃப் ஸ்பின்னருக்குரிய கனவுப்பந்துதான், ஆனால் டெக்னிக் இல்லாததால்தான் டக்கெட் ஆட்டமிழந்தார், முன்னங்கால் நகரவே இல்லை. பந்தின் திசையைக் கணிக்காமல் காலை நகர்த்தாமல் ஆடப்போய் பீட்டன் ஆகி பவுல்டு ஆனார். கிளென் மெக்ரா வர்ணனை அறையில் துள்ளிக் குதித்தார், அவர் சாதனையைத்தான் லயன் முறியடித்து விட்டார்.
கிளென் மெக்ரா 124 டெஸ்ட்களில் 563 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இப்போது நேதன் லயன் தன் 141வது டெஸ்டில் அவரைக் கடந்து இதுவரை 564 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோ ரூட் விக்கெட்டையும் இழந்தது, இன்னொரு பாட் கமின்ஸின் அருமையான ஒர்க் அவுட் செய்த டெலிவரி, ரூட் எட்ஜ் செய்து கேரியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் என்று திணறி வருகிறது.
