இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி அடுத்த மாதம் (ஜனவரி, 2026) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரை எதிர்கொள்ள இருக்கிறது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கான அணியையும் பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் தொடர்கிறார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், தற்சமயம் அதிலிருந்து மீண்டு வருவதாலும், டி20 உலகக் கோப்பை தொடர் காரணமாகவும் ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இதில் டெவான் கான்வே, டேரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ், ஜக்காரி ஃபால்கஸ், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், வில்லியம் ஓ ரூர்க், பிளைர் டிக்னர் உள்ளிட்டோர் காயம் காரணமாக அல்லது பணிச்சுமை காரணமாக ஒருநாள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரச்சின் ரவீந்திரா டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர அறிமுக வீரர் ஜெய்டன் லெனாக்ஸ் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல் மார்க் சாப்மேன், மேட் ஹென்றி உள்ளிட்டோர் நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜக்காரி ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், இஷ் சோதி.
நியூசிலாந்து ஒருநாள் அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜக்காரி ஃபால்க்ஸ், மிட்செல் ஹேய், கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
