2026 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்று, அணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் தலா லட்சக்கணக்கில் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதால், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்திய அணியிடம் தோற்றதுதான் இந்த அபராதத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
வீரர்களின் அபராதம் மட்டுமின்றி, அவர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்திலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பிசிபி திட்டமிட்டுள்ளது. வீரர்களின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதி மற்றும் களத்தில் அவர்கள் காட்டிய மெத்தனப் போக்கே இந்தத் தோல்விக்குக் காரணம் என வாரியம் கருதுகிறது. குறிப்பாக, முக்கியப் போட்டிகளில் மூத்த வீரர்கள் சொதப்பியது நிர்வாகத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
