நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணியை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறியது.
இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிகள் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஜானி பெர்ஸ்டோ களமிறங்கினர். வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். மறுபுறம் தடாலடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ஸ்டோ 38 ரன்கள் சேர்த்து வியாசக் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரும் தலா 44 ரன்கள் குவித்த நிலையில், அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் ஜோடி இறுதிக்கட்டத்தில் ரன்களை குவிக்க போராடினர். ஹர்திக் 15 ரன்களும், நமன் திர் 37 ரன்களும் எடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது மும்பை.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அடித்து ஆட முயன்றனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ப்ரியன்ஷ் ஆர்யா 20 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஜோஷ் இங்கிலிஷ் தடாலடியாக ஆடி 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. குறிப்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடினார். 41 பந்தில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுவும் வெற்றிக்கான இலக்கை சிக்சர் அடித்து நிறைவு செய்தது பஞ்சாப் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. வதேரா தன் பங்குக்கு 48 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 6 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இதன்மூலம் நாளை நடைபெறும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களுர் அணியை, பஞ்சாப் எதிர்கொள்கிறது.
டெல்லி, கொல்கத்தா, தற்போது பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளின் கேப்டனாக இருந்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார்.