இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து களமிறங்கினார். இவரை எதிர்த்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் உலகின் தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான போர்ன்பாவீ சோச்சுவாங் மோதினார்.
1 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பி.வி.சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, மூன்றாவது செட்டின் போது 16-13 என்ற முன்னிலை கிடைத்ததை வெற்றியாக மாற்றி இருக்க வேண்டும், ஆனால் எதிர்பாராத விதமாக அதனை செய்ய தவறி விட்டேன் என்றார்.
இருப்பினும் இளம் வீராங்கனை ஒருவரிடமிருந்தும், இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்று பி.வி.சிந்து குறிப்பிட்டார்.