தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இணையத்தளத்தில் தொடங்கியுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான முத்லாமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்படவுள்ளது.
மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.
குழுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.
ரூ. 37 கோடி மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன. முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 17.7.2025 முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.8.2025 மாலை 6 மணி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.