தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கைக்கூட எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறினார்கள். இதனால் இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறையும், கவுதம் கம்பீரின் பயிற்சி திட்டங்களும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
போட்டியை 3 நாட்களில் முடிக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் 3 மணி நேரம் தீவிர பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் கவுதம் கம்பீர் முன்னிலையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் பயிற்சி செய்தனர்.
