தனது திருமணம் நின்றுவிட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார்.
அத்துடன் மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில வாரங்களாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் நவம்பர் 23 ம்தேதி இருவரது திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் உள்ள ஸ்மிருதி மந்தனா குடும்பத்தினருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருமணம் நடைபெறும் இடத்துக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சீனிவாஸ் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தான் ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலாஷ் முச்சல் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் அவரது சகோதரி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை உடல்நிலை காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, பலாஷ் முச்சல் குறித்த ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலானது, மேரி டி’கோஸ்டா என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பலாஷுடனான தனது சாட் (chat) ஸ்க்ரீன்ஷாட்களை வெளியிட்டுள்ளார். அதில் மும்பையில் உள்ள வெர்சோவா கடற்கரையில் மேரியை அதிகாலை 5 மணிக்கு தன்னைச் சந்திக்க அழைத்தது தெரியவந்துள்ளது. அதேபோல், ஸ்மிருதியைக் காதலிப்பது குறித்து மேரி கேள்வி எழுப்பியதற்கும் பலாஷ் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்த ஸ்கிரீன்ஷாட்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் இவை வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால், ஸ்மிருதி மந்தனாவை பலாஷ் ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தனது திருமணம் நின்றுவிட்டதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தை தான் இத்துடன் நிறுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தான் இனி இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் பல கோப்பைகளை வெல்ல நினைப்பதாக பதிவிட்டுள்ள அவர், இனி அதுவே தனது கவனம் எனவும் தெரிவித்துள்ளார் . இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
