இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக சேனுரன் முத்துசாமி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், சதத்தை நெருங்கிய மார்கோ ஜான்சன் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணி 201 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் காரணமாக இந்திய அணி ஃபாலோ ஆன் ஸ்கோரை கூட எடுக்க தவறியது. இருப்பினும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் முடிவில் 26 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து 314 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்தது. அதன்படி ஐடன் மார்க்ரம் 12 ரன்களுடனும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 29 ரன்களிலும், ரிக்கெல்டன் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – டோனி டி ஜோர்ஸி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துடன், 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய டோனி டி ஜோர்ஸி 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பவுண்ட்ரிகளை விளாசித் தள்ளினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்டப்ஸ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.
